18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உடற்பயிற்சி: காயம் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்த ரகுல் ப்ரீத் சிங்!

18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உடற்பயிற்சி: காயம் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்த ரகுல் ப்ரீத் சிங்!

உடலமைப்பை எப்போதும் பிட்டாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், கடந்த 2024 இறுதிப் பகுதியில் ஜிம்மில் 80 கிலோ எடையைத் தூக்க முயன்றபோது மிக மோசமான முதுகுக்காயத்தைச் சந்தித்தார். சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்துவந்த அவர், தற்போது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது உடற்பயிற்சிகளைத் தொடங்கியுள்ளார்.

தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘இந்தியன் 2’ என முன்னணி படங்களின் மூலம் கவனமீர்த்த இவர், தமக்கு நேர்ந்த இந்த விபத்து மற்றும் மீண்டு வந்த அனுபவம் குறித்துத் திறந்த மனதுடன் பேசியுள்ளார்.

“வாழ்க்கைப் பயணத்தில் எதிர்பாராத சவால்கள் குறுக்கிடுவது இயல்பு. எனக்கு அது காயமாக உருவெடுத்தது. தினமும் தீவிர இலக்குகளை நோக்கி ஓடிக்கொண்டிருந்த என்னை இந்தச் சம்பவம் அப்படியே முடக்கிப்போட்டது.

எனினும், இந்த அமைதியான காலம் எனக்குள் மிகுந்த பொறுமையைக் கற்றுக்கொடுத்தது. புதிய இலக்குகளை அடைவதை விட உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதே மிக முக்கியம் என்பதை உணர்ந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பின் ஜிம்மிற்குள் அடியெடுத்து வைத்தது சொந்த வீட்டிற்குள் நுழைந்தது போன்ற உணர்வைத் தந்தது. இப்போது கூடுதல் மனவலிமை, தெளிவான பார்வை மற்றும் நன்றியுணர்வோடு என் வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளேன்” என்று ரகுல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.